சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் எடுப்பது இப்போது அதிகமாக இருந்தாலும் 60-களில் வெளியான சிவாஜி நடித்த படம் ஒன்றின் 2-ம் பாகத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், நடிப்பால் முத்திரை பதித்து நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்தவர் தான் சிவாஜி கணேசன். நாடக நடிகராக இருந்து, பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், தனது வாழ்வின் இறுதிநாள் வரை நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர். அந்த வகையில், கடந்த 1963-ம் ஆண்டு வெளியான படம் இருவர் உள்ளம்.
எல்.வி.பிரசாத் இயக்கிய இந்த படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். சிவாஜி, சரோஜா தேவி இணைந்து நடித்த இந்த படத்தில், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சிவாஜி துரத்தி துரத்தி சரோஜா தேவியை காதலிக்க, அவரை வெறுத்து ஒதுக்குகிறார் சரோஜா தேவி. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.
60-களில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் 2-ம் பாகத்தை இயக்குனர் சி.வி.ஸ்ரீதரின் அண்ணன், சி.வி.ராஜேந்தர் வைத்து இயக்க வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்தமகன், ராம்குமார் விரும்பியுள்ளார். ஆனால் அப்போது இந்த படம் அடுத்த கட்டத்திற்கு போகாத நிலையில், 34 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படம் தளபதி விஜய் நடிப்பில் இருவர் உள்ளம் படத்தின் 2-ம் பாகமாக வெளியாகியுள்ளது.
1997-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய், சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல் இருவர் உள்ளம் படத்தின் இணைந்து நடித்த சிவாஜி கணேசன், சரோஜா தேவி இருவரும் விஜய் அப்பா அம்மாவாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜி – சரோஜா தேவி இடையிலான ப்ளாஷ்பேக் காட்சிக்கு இருவர் உள்ளம் படத்தின் காட்சிகள் இடம் பெறும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பார். இந்த படம் சிம்ரன் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமாகும்.
