kerala-logo

இந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி அதிகரிக்க வாய்ப்பு!


குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை போன்ற பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநில துணை முதலமைச்சரான சம்ராத் சவுத்ரியின் தலைமையிலான அமைச்சர்கள் குழு வரி விகிதங்களை நெறிப்படுத்துவதற்கு முடிவு செய்ததுள்ளது. அதன்பேரில், ரூ. 1500  வரை விலை கொண்ட ரெடிமேட் ஆடைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியும், ரூ. 1500 முதல் ரூ. 10,000 வரையிலான ரெடிமேட் ஆடைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியும், ரூ. 10,000-க்கு மேலான ஆடைகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரியும் முன்மொழியப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், 148 பொருள்களுக்கு அமைச்சர்கள் குழு ஜி.எஸ்.டி வரி விகிதத்தை அதிகரிப்பது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறது.
டிசம்பர் 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இணைந்து ஜி.எஸ்.டி வரி குறித்த விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அன்று ஜி.எஸ்.டி வரி மாற்றங்களுக்கான இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். புகையிலை மற்றும் அது தொடர்பான பொருள்கள், குளிர்பானங்களுக்கு 35 சதவீதம் என்ற சிறப்பு விகிதத்தை வழங்குவதற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே உள்ள 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி வரம்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும், 35 சதவீதம் என்ற புதிய விகிதத்தை அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டியின் கீழ் அத்தியாவசிய பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அல்லது குறைந்தபட்ச வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆடம்பர பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. கார், வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருள்களுக்கும், குளிர்பானங்கள் மற்றும் புகையிலை தொடர்புடைய பொருள்களுக்கும் 28% வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபர் மாதம் நடந்த சந்திப்பின்போது 20 லிட்டர் வாட்டர் கேனுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. மேலும் ரூ. 10,000-க்கு குறைவான விலை கொண்ட பைசைக்கிள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.
நோட்டு புத்தகங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் ஆகவும், ரூ. 15,000-யை விட அதிகமாக விற்பனையாகும் ஷூக்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் ரூ. 25,000-க்கு அதிகமான விலை கொண்ட கை கடிகாரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடந்த கூட்டத்தின் போது பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops