தமிழ்நாட்டு இளைஞர்கள் சுமார் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்த போடப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் அளித்துள்ளார்.
வேலூர் மண்டல அளவிலான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (டிச 14) நடைபெற்றது. தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்ட இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் மற்றும் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோர் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, “தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மண்டல கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வேலூர் மண்டல அளவிலான கூட்டம் இன்று (டிச 14) நடந்தது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதற்காக எனது தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் இணைந்த ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இந்த குழு சார்பில், ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். ஒப்பந்தங்கள் அனைத்தையும் முதலீடுகளாக மாற்றும் வகையில் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று பெறப்பட்ட ஒப்பந்தங்கள் முற்றிலும் முதலீடுகளாக வரும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நேற்று (டிச 13) அமெரிக்காவில் கையெழுத்தாகி இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
