kerala-logo

கேன்சரோடு போராடும் பிரபல கராத்தே மாஸ்டர் – ஜீரோவுக்கு போன ரத்தம்; உயிருக்கு போராடும் ஹுசைனி!


மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஷிகான் ஹுசைனி. கராத்தே மாஸ்டர் இவர் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இவர் கே.பாலசந்தர் மூலம் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் அறிமுகமானார். வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்திருக்கிறார். விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதில் விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.

நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் தனது கராத்தே பயிற்சி அளித்துள்ளார். மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் கராத்தே போன்றவைகளில் கவனம் செலுத்திய அவர் சின்னத்திரையில் தோன்றி கராத்தே பயிற்சி கொடுத்தார். அதேபோல் அதிரடி சமையல் என்கிற நிகழ்ச்சியையும் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தினார். அது அப்போதைக்கு பலரிடமும் கவனத்தை ஈர்த்தது
இந்த நிலையில் ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக தனியார் யூடியூப் சேனல்களுக்கு உருக்கத்துடன் தெரிவித்திருந்தார். தான் ஒருநாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட 2 பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும். மேலும் தான் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஹுசைனியின் இந்தப் பேட்டிக்கு பிறகு பலரும் அவருக்காக வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ காலில் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதிமுக தீவிர ஆதரவாளரான ஹுசைனி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தன்னுடைய 20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து ஜெயலலிதாவுக்கு சிலை செய்து பரிசாக கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் அது விமர்சனத்தை சந்தித்தது.

அப்படி தன்னுடைய 20 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்த மனிதர் இன்று ஒருநாள் வாழவே 2 லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறதே என்று நெட்டிசன்கள் வருத்தத்துடன் பதிவிட்டுவருகின்றனர்.
அவரது வெள்ளை அணுக்கள் (white blood cells) 4000 ஆக இருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹுசைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே, ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Kerala Lottery Result
Tops