‘கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நீண்ட கால தயாரிப்பிற்கு பின் வெளியான படம் ‘கங்குவா’. இப்படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்தார். அதே போல், படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளார். மிகுந்த எதிர்ப்பார்புக்கு மத்தியில் படம் வெளியான நிலையில் ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை. பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தை பார்த்த நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்தும், கேள்வி எழுப்பியும் உள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல, ஒரு சினிமா ரசிகையாக இந்த பதிவை எழுதியுள்ளேன். கங்குவா சினிமாவில் ஒரு அதிசயம். ஒரு நடிகனாக, சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முயலும் சூர்யாவை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. கங்குவா படத்தில் நிச்சயமாக முதல் அரை மணி நேரம் ஒர்க் அவுட் ஆக வில்லை; அதேபோல் சத்தமும் அதிகமாக இருந்தது.
படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
குறைகள் என்பது ஒவ்வொரு படத்திலும் ஒரு அங்கமாக இருக்கும். இதுபோன்ற பரிசோதனை முயற்சியில் எடுக்கப்படும் படங்களில் அது இருப்பது நியாயமானது. அதுவும் 3 மணிநேரத்தில் வெறும் அரை மணிநேரம் மட்டும் தான். மற்றபடி உண்மையாக சொல்லவேண்டும் என்றால் இது தரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு ஒளிப்பதிவை இதற்கு முன்னர் பார்த்ததில்லை.
ஊடகங்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்களிடம் இருந்து இந்த அளவு நெகடிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்து நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன்
சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் இரட்டை அரத்த வசனங்கள், பெண்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளன. ஆனால் இந்த படங்களுக்கு எல்லாம் எவ்வித எதிர்மறை விமர்சனங்களும் இல்லை.
கங்குவா படத்தில் உள்ள பாசிடிவ் என்ன ஆச்சு? இரண்டாம் பாதியில் உள்ள பெண்களின் சண்டைக்காட்சி, சிறுவனுக்கு கங்குவா மீதுள்ள அன்பும், பகையும் அதெல்லாம் ஏன் சொல்லவில்லை. நல்ல நல்ல காட்சிகளை விமர்சனத்தில் கூற மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். இதையெல்லாம் படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா, நம்ப வேண்டுமா என எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
படம் ரிலீஸாகி முதல் காட்சி முடியும் முன்னரே சில கும்பல்களால் இந்த அளவு நெகடிவிட்டி பரப்பப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. கங்குவா டீம் நீங்கள் பெருமையாக இருங்கள். நெகடிவ் கமெண்ட் அடிப்பவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும். அவர்களால் அதுதான் செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
