தமிழர்களின் வாழ்க்கையையும் பாட்டையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல, தமிழ் சினிமாவையும் இசையையும் பிரிக்கவே முடியாது. வேறு எந்த நாட்டு மொழிப் படங்களைவிட தமிழ் சினிமாவில் பாடல்கள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணம் தமிழர்களின் இந்த வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.
தமிழ் சினிமா ஆரம்பத்தில் கதைகளைவிட, பாடலுக்காக ரசிகர்களை ஈர்த்தது. தமிழ் திரை இசை வரலாற்றில் இசையமைப்பாளர்கள் பிரபலம், அதே அளவுக்கு பின்னணி பாடகர்களும் பிரபலம். அந்த வகையில், பி. சுசீலாவின் குரலுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். தமிழ் திரை இசை ரசிகர்களை தனது இனிமையான குரலால் ஒரு கால் நூற்றாண்டு ஈர்த்தவர் பின்னணி பாடகி பி. சுசீலா. பல நூறு பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். பல சாகாவரம் பெற்ற பாடல்களைப் பாடி ரசிகர்களின் நீங்கா இடம்பிடித்தவர்.
ஜெயா டிவியில் நடிகை சுஹாசினி நேர்காணல் செய்த ஒரு நிகழ்ச்சியில், பின்னணி பாடகி பி. சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு ரகசியப் பாட்டு பாடிய சுவாரசியமான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, மற்றும் பலர் நடித்து 1963-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான், பெரிய இடத்துப் பெண். இந்த படத்தில் தான், எம்.எஸ்.வி கட்டளையிட்டு பி. சுசீலா பாடிய அந்த ரகசியப் பாடல் இடம் பெற்றுள்ளது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பெரிய இடத்துப் பெண் படத்துக்காக ஒரு ரகசியமான பாடலைப் பாட பி. சுசீலாவை அழைத்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில், இந்த பாடலை ஒரு ரகசியமான குரலில் பாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு ரகசியம் பேசுவது போல், இந்த பாடலைப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
பாடகி பி.சுசீலா சரி என்று அந்த ரகசியப் பாடலைப் பாடல் மைக் முன்னே சென்று, ‘ரகசியம்… ரகசியம்…’ என்று ரகசியக் குரலில் மெதுவாகப் பாடியிருக்கிறார். ஆனால், அவருடைய குரல் யாருக்குமே கேட்காமல் போயிருக்கிறது.
உடனே பி. சுசீலா பாடும் அறைக்குள் நுழைந்த எம்.எஸ்.வி., ஏம்மா நீங்க பாடுனது யாருக்குமே கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு, பாடகி பி. சுசீலா, நீங்கள்தானே ரகசியமாகப் பாட வேண்டும் என்று கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார்.
அதற்கு எம்.எஸ்.வி. அவ்வளவு ரகசியமா இல்லம்மாஅ, நீங்கள் மெல்லிய குரலில் கொஞ்சம் சத்தமாக ரகசியமாகப் பாடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, பி.சுசீலா மெல்லிய குரலில், ரகசியம் பேசுவது போல, அந்த ரகசியப் பாடலைப் பாடியிருக்கிறார். பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம்பெற்ற அந்த பாடல்தான், ‘ரகசியம்… இது பரம ரகசியம்… இது நமக்குள் இருப்பது அவசியம்…’ என்ற பாடலாகும்.
பி. சுசீலா பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானது. இந்த பாடல் ஒரு அழகான சூப்பர் ஹிட் பாடலாகி வெற்றி பெற்றது.
