கருத்து வேறுபாடு காரணமாக கண்ணதாசன் – எம்.ஜி.ஆர் பிரிவு ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்காக பல ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய அனைத்து பாடல்களும் எம்.ஜி.ஆருக்கு பலித்திருந்தாலும், ஒரு பாடல் மட்டும் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி எழுதி தர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் பிரபலமாக அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்த நிலையில், அப்போது வாலி எம்.ஜி.ஆருக்கான பாடல்களை எழுத தொடங்கியுள்ளார். வாலி எழுதிய பல பாடல்கள் இன்றைக்கும் எம்.ஜி.ஆர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஒளிபரப்பாகி வருகிறது.
வாலி எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், எம்.ஜி.ஆர் தனக்கு பாடல் இப்படி வேண்டும் என்று எந்த பாடலுக்கு சொன்னதே இல்லையாம் ஒரு பாடலை தவிர. அந்த பாடல் நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற ‘நான் படித்தேன் காஞ்சியிலேநேற்று’ என்ற பாடல் தான். இது குறித்து வாலி கூறுகையில், எந்த பாடலுக்கும் எம்.ஜி.ஆர் என்னிடம் இப்படி வே்ணடும் என்று கேட்டதே இல்லை.
அவருக்கு நான் எழுதியது எல்லாம் பலித்தது. இறைவா உன் மாளிகையில் என்று எழுதினேன் பிழைத்து வந்துவிட்டார். நினைத்தேன் வந்தாய் 100 வயது என்று எழுதினேன் பிழைத்து வந்துவிட்டார். என் ஆட்சி என்றால் என்று எழுதினேன். ஆட்சியில் அமர்ந்தார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று எழுதினேன். அந்த தொடர்பு இப்போதும் நிலைத்திருக்கிறது.
அதே சமயம் கட்சியில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக புதிய கட்சி தொடங்கியபோது, இந்த மாதிரி சில கருத்துக்கள் இந்த பாடலில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த ஒரு பாடலுக்கு மட்டும் யோசனை சொன்னார். அந்த பாடல் தான் ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ என்ற பாடல் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.