இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒரே மெட்டை இரு கவிஞர்களிடம் கொடுத்து பாடலை எழுத சொல்ல, அந்த இரு பாடலும் ஒரு மாதிரி இருந்ததால், கடைசியில் பெரிய குழப்பம் ஏற்பட்டு ஒரு பாடலை படத்தில் இருந்து நீக்கியதால், கவிஞர் ஒருவர் கோபத்தில் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. கல்யாண் குமார், தேவிகா, இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அவருக்கு பஞ்சு அருணாச்சலம் உதவியாளராக இருந்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
பொதுவாக ஒரு பாடலுக்கு மெட்டு அமைக்கும்போது, அந்த மெட்டு தொடர்பான குறிப்புகளை எழுத இருவர் இருப்பார்கள். அப்படி தான் நெஞ்சம் மறப்பதில்லை பாடலுக்கு எம்.எஸ்.வி மெட்டு அமைக்கும்போது குறிப்பு எழுதிய இருவர், அந்த படத்தின் ஒரு பாடலுக்கான குறிப்பை கவியரசர் கண்ணதாசனிடம் கொடுத்துள்ளனர். அந்த மெட்டுக்கு அவர், ‘அழகுக்கும் மலருக்கும்’ என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் ஓகே செய்யப்பட்டு பி.சுசீலா பிபிஸ்ரீனிவாஸ் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதே காலக்கட்டத்தில் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான பூஜைக்கு வந்த மலர் என்ற படத்திற்கு இசையமைத்த எம்.எஸ்.வி, கவிஞர் மாயவநாதனுக்கு ஒரு பாடல் கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கான மெட்டை கொடுப்பதற்கு பதிலாக அந்த இசை குறிப்பு எடுத்தவர்கள், நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு கண்ணதாசன் பாடல் எழுதிய அதே மெட்டை மாயவநாதனிடம் கொடுத்துள்ளனர். அவரும் அதற்காக பாடலை இலக்கிய நடையில் எழுதியுள்ளார்.
இந்த பாடலும் ஓகே செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த பாடலையும் பி.சுசீலா பாடியுள்ளார். பாடும்போது இதேபோன்ற ஒரு பாடலை இதற்கு முன்பே பாடி இருக்கிறோமே என்று யோசித்த பி.சுசிலா அது என்ன பாட்டு என்று ஞாபகம் வந்த பிறகு எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார். அதற்குள் மாயவநாதன் எழுதிய ‘திங்களுக்கு என்ன இன்று திருமணமோ’ என்ற அந்த பாடல், பதிவு செய்யப்பட்டு இலங்கை வாணொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி உண்மை தெரிந்த எம்.எஸ்.வி, படத்தின் இயக்குனர் முக்தா சீனிவாசனை அழைத்து தவறு நடந்துவிட்டது. இந்த பாடல் வேண்டாம் நான் வேறு பாடல் உங்களுக்கு பண்ணித்தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அந்த பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், கவிஞர் மாயவநாதன், இலக்கிய நடையுடன் ஒரு பாடலை நான் எழுதி கொடுத்தேன். ஆனால் அதை படத்தில் நீங்கள் வைக்கவில்லை என்று கோபப்பட்டுள்ளார். யாரோ செய்த தவறுக்காக எம்.எஸ்.வி சங்கடத்தில் ஆழ்ந்தார்.