நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த ஒரு படத்திற்காக நிஜ சாக்கடையில் கையை விட்டு ஆப்பிள் எடுத்துள்ளார். அதன்பிறகு கே.பாலசந்தரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக, சினிமாவில் தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தான் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், வாலிப வயதில் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த கமல்ஹாசன், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் தனது அரங்கேற்றம் படத்தில் அவரை நாயகனாக அறிமுகம் செய்தவர் தான் கே.பாலச்சந்தர். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 1980-ம் ஆண்டு வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தை இயக்கியிருந்தார். வேலை இல்லாத இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.வி.சேகர், திலீப், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் ஒரு காட்சியில், கடுமையான பசியில் இருக்கும் கமல்ஹாசன் நடந்து வந்துகொண்டிருக்கும்போது, ஒருவர் குப்பைகளை கொட்டுவார். அதில் இருந்த ஒரு ஆப்பிள் பழம், உருண்டு சென்று சாக்கடையில் விழுந்துவிடும். அந்த பழத்தை கமல்ஹாசன் சாக்கடையில் இருந்து எடுக்க வேண்டும். அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தபோது இந்த இடம் சாதாரண குட்டை என்று நினைத்த பாலச்சந்தர், காட்சியை விளக்கிவிட்டு, கமல்ஹாசனை நடிக்குமாறு கூறியுள்ளார்.
குருநாதர் பேச்சை தட்டாத கமல்ஹாசன், உடனடியாக அந்த குட்டையில் கைவிட்டபோது தான் அவருக்கு தெரிந்துள்ளது அது நிஜ சாக்கடை என்று. இதனால் காட்சி சிறப்பாக வரவில்லை என்று கூறி ரீடேக் செய்ய சொன்ன கே.பாலச்சந்தர், என்னடா இப்படி பண்ற இன்னும் நல்லா பண்ணு என்று சொல்ல, சார் இது நிஜ சாக்கடை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதை கேட்ட பாலச்சந்தர், அப்படியா ஓ சாரி சாரி டா என்று சொல்ல, கமல்ஹாசன் பரவாயில்லை சார் என்று நடிக்க தொடங்கியுள்ளார்.
அதே சமயம், இப்போது ஓகே சார், ஆனால் சாக்கடையில் இருந்து எடுத்த ஆப்பிளை சாப்பிட வேண்டிய காட்சிக்கு வேறு ஆப்பிளை கொடுத்துவிடுங்கள் என்று கே.பாலச்சந்தரிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதன்பிறக அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.