நடு கடலில் படப்பிடிப்பு நடந்தபோது, மதிய சாப்பாட்டுக்கு இலை மற்றும் தட்டுகள் தண்ணீரில் விழுந்ததால், அனைவரும் எப்படி சாப்பிடுவது என்று யோசித்தபோது நடிகர் எம்.ஜி.ஆர் தனது கைகளில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளார். அது என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். நடிகராக இருந்தபோது, அரசியலுக்கு வந்தபோதும், தனது வாழ்நாளில் பலருக்கு உதவி செய்துள்ள எம்.எஜி.ஆர் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறார்.
தான் சினிமாவில் இருந்தபோதும், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முதல்வர் ஆனாபோதும் தனது உதவி செய்யும் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளாத எம்.ஜி.ஆர், தனது வாழ்நாளின் இறுதிவரை கொடை வள்ளலாக இருந்துள்ளார். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதை கடைசி வரை பின்பற்றியவர் எம்.ஜி.ஆர். பின்னாளில் விஜயகாந்த் இதை தனது படங்களின் படப்பிடிப்பில் செய்து காட்டினார்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் எம்.ஜி.ஆர் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில், ஊழியர்கள் சாப்பாடு கொடுக்க, அதை தனது கையில் வாங்கி சாப்பிட்டுள்ளார். பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தின் படப்பிடிப்பு நடு கடலில் நடந்துகொண்டிருந்தபோது படகில் அனைவருக்கும் சாப்பாடு எழுத்து வந்துள்ளனர். காற்றில் படகு ஆடும்போது சாப்பி்ட வைத்திருந்த தட்டு இலை என அனைத்தும் தண்ணீரில் விழுந்துள்ளது.
12.30 மணிக்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளனர். சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு சாப்பிட அனைவரும் வருகிறார்கள் ஆனால் சாப்பாடு கொடுக்கவில்லை. இதனை கவனித்த எம்.ஜி.ஆர் என்னாச்சு என்று விசாரிக்க, வரும்வழியில் பெரிய அலை வந்ததால், சாப்பிட வைத்திருந்த தட்டு, இலை என அனைத்தும் தண்ணீரில் விழுந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இப்போ என்ன தான் இருக்கு என்று எம்.ஜி.ஆர் கேட்க,சாப்பாடு எல்லாமே இருக்கு எதில் கொடுப்பது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
அப்போது எம்.ஜி.ஆர் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கு என்று கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள் சாப்பாடு, சாம்பார், பொறியல் என அனைத்தையும் ஒன்றாக கலக்க, அதனை முதல் ஆளாக தனது கையில் வாங்கி சாப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். அவர் கையில் வாங்கி சாப்பிடுவதை பார்த்த அனைவருமே வரிசையில் நின்று, ஊழியர்கள் கொடுக்க கொடுக்க தங்களது கையில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த தகவலை நடிகர் மயில்சாமி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.