எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட ஒரு படத்தை கையில் எடுத்து அதற்கு தன் பாணியில் திரைக்கதை அமைத்து வெற்றிப்படமாக மாற்றியுள்ளார் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இது எப்படி சாத்தியமானது தெரியுமா?
எம்.ஜி.ஆர் நடிப்பில் உரிமைக்குரல் உள்ளிட்ட சில படங்கயை இயக்கிய இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான படம் அண்ணா நீ என் தெய்வம். எம்.ஜி.ஆர் லதா, சங்கீதா, நம்பியார், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பாதிக்கு மேல் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகிவிட்டார். இதனால் தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக அண்ணா நீ என் தெய்வம் படம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த படத்திற்காக 10-12 லட்சம் செலவு செய்துவிட்டேன். இப்போது இதை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் பல இயக்குனர்களிடம் கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ், அந்த தயாரிப்பாளரிடம் இந்த கதைக்கு தகுந்தபடி நான் ஒரு கதை எழுதி தருகிறேன் ஒரு ஆக்ஷன் ஹீரோவை வைத்து படமாக்குங்கள் என்று கூறியுள்ளார்.
பாக்யராஜூ சொன்ன இந்த வார்த்தையை கேட்ட அந்த தயாரிப்பாளர் இதை உடனடியாக எம்.ஜி.ஆரிடம் சொல்ல, மறுநாள் பாக்யராஜூவுக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன்பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த பாக்யராஜூவிடம், ஏன் வேறொரு ஹீரோவைத்து எடுத்துக்கொள்ள சொன்னாய் என்று கேட்க, உங்கள் அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அப்போது தான் சரியாக இருக்கும் என்று பாக்யராஜ் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஏன் நீயே அந்த கதையில் நடிக்கலாமே என்று கூறியுள்ளார்.
நான் நடித்தால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று பாக்யராஜ் சொல்ல, அதெல்லாம் முடியாது நீ நடித்தால் நடி இல்லை என்றால், அந்த காட்சிகளை நான் குப்பையில் போட்டுவிடுகிறேன். அந்த தயாரிப்பாளருக்கு நாள் பணம் கொடுத்துவிடுகிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதை கேட்ட பாக்யராஜ், நான் சண்டைக்காட்சியில் அவ்வளவாக நடித்தில்லை என்று சொல்ல, நான் சொல்கிறேன். இந்த கதையில் நீ தான் நடிக்க வேண்டும். என் படத்தை வேறு யாருக்கும் நான் கொடுப்பதாக இல்லை. கதையை தயார் செய்துவிட்டு வந்து என்னை பாரு என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் வார்த்தையை தட்ட முடியாத பாக்யராஜ் அந்த படத்தை இயக்கி நடித்து இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றது.
