கண்ணதாசன் கதை வசனம் மற்றும் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த ஊமையன் கோட்டை என்ற திரைப்படம், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு நின்றுவிட்ட நிலையில், அதற்கு காரணம் யார் என்பது குறித்து கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எழுத்தாளர், கவிஞர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்த கவியரசர் கண்ணதாசன், எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்புடன் இருந்தபோது, ஒருநாள் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை பற்றிய கதையை கூறியுள்ளார். இந்த கதையை கேட்டு, எம்.ஜி.ஆர், நான் கால்ஷீட் கொடுக்கிறேன். நீங்கள் இந்த படத்தை எடுங்கள் என்று சொல்ல, கண்ணதாசனும் உற்சாகமாக ஒப்புக்கொண்டு படத்திற்கான வேலைகளை செய்கிறார்.
அப்போது தயாரிப்பாளரும் பிரபல பைனான்சியருமான சிங்காரம் செட்டியார் கண்ணதாசனை சந்தித்து, எம்.ஜி.ஆர் உங்களுக்கு டேட் கொடுத்துவிட்டார். படத்திற்கு பைனான்ஸ் நான் கொடுக்கிறேன். என் ஆபீஸை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு மேல் புதிய ஆபீஸ் பார்த்தால் அதிகம் செலவாகும் என்று யோசித்த கண்ணதாசன், அவரது ஆபீஸில் இருந்து படத்திற்கான வேலைகளை செய்துள்ளார். அண்ணாவின் தலைமையில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் மேடை அமைத்து படத்திற்கான பூஜை நடந்துள்ளது.
சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், எம்.ஜி.ஆர் நடிக்கும் காட்சிக்காக அவருக்கான காஸ்டியூம் தயார் செய்ய யோசித்துள்ளனர். அப்போது எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்த ரங்கசாமி என்பவர், சிங்காரம் செட்டியாரிடம் சென்று, காஷ்டியூம் தைக்க பணம் கேட்டபோது, அவர் 10 நாட்கள் இழுத்தடித்துள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர, அவர் நேரடியாக சிங்காரம் செட்டியாரிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் ஏடாகூடமாக பேச இருவருக்கும் இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக படத்திற்கு ஒதுக்கியிருந்த கால்ஷீட்டை எம்.ஜி.ஆர் கேன்சல் செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட கண்ணதாசன், இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்ய, எம்.ஜி.ஆர் கடும் கோபத்தில் இருந்துள்ளார். கண்ணதாசன் சிங்காரம் செட்டியார் அலுவலகத்தில் தான் இருக்கிறார். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்று எம்.ஜி.ஆரிடம் பலர் கூறியுள்ளனர். இதை நம்பிய எம்.ஜி.ஆர் கண்ணதாசனுக்கு எதிராக சில விஷயங்களை செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர் செய்ததால் கண்ணதாசன், இந்த படத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு செல்ல, அவரே 15 நாட்களில் படப்பிடிப்பை தொடங்குகள் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று நோட்டீஸ் அனுப்ப, படத்தில் நடிக்காமல் அட்வாஸ் வாங்கிவிட்டீர்கள் திரும்பி கொடுங்கள் என்று கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் அனுப்ப, சிங்காரம் செட்டியார் படமே நின்றுவிட்டது என் பணத்தை கொடுங்கள் என்று கண்ணதாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளா.
இதற்கிடையே திராவிட முன்னேற்ற கழகம் வளர்ந்து வரும் இந்த சூழலில் இவர்கள் இருவரும் சண்டைபோட்டுக்கொள்வதை தாங்கிக்கொள்ளாத அறிஞர் அண்ணா, கண்ணதாசன் எம்.ஜி.ஆர் இடையே சமாதானம் பேச முயற்சி செய்தபோது, இதை மீண்டும் தொடர நான் விரும்பவில்லை விட்டுவிடுங்கள் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். இந்த ஊமையன் கோட்டை திரைப்படம் தான் பின்னாளில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சிவகங்கை சீமை என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
