kerala-logo

விமர்சகர்கள் இவ்வாறு செய்வது வேதனை தருகிறது: கோவையில் நடிகர் ரியோ பேட்டி


கோவை பந்தய சாலை பகுதியில் பாசிபிள் (Possible) எனும் புதிய வீடியோ மற்றும் ஆடியோ தொழில் நுட்பம் தொடர்பான ஸ்டுடியோ துவங்கப்பட்டுள்ளது. இதை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் ரியோ திறந்து வைத்தார்.
திரைப்படம், சின்னத்திரை போன்றவற்றை தாண்டி தற்போது அதிகரித்து வரும் யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் தங்களை பிரபலப்படுத்த நினைப்பவர்களுக்கும்,அதே நேரத்தில்  தேர்ந்த நுட்பமான தொழில் நுட்பத்தில் தங்களது  வீடியோ மற்றும் ஆடியோக்களை டப்பிங்,எடிட்டிங் செய்து முழு வீடியோவாக தயாரித்து வழங்கும் வகையில்,  போட்காஸ்டிங் வசதி அரங்குகள் உடன் அதி நவீன  வசதிகள் இந்த ஸ்டுடியோவில் உள்ளன.
ஸ்டுடியோவை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரியோ, கோவையில் திரைப்படம் தொடர்பான கலைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற ஸ்டுடியோக்கள் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் ஸ்வீட் ஹார்ட் எனும்  புதிய படத்தில் நடித்துள்ளேன். படம் விரைவில் வெளியாக உள்ளது. காதல் கதையில் புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்.
படம் நன்றாக இருந்தால் புதிய இயக்குனர் புதிய நடிகர் என்பதை தாண்டி ரசிகர்கள் வரவேற்பு வழங்கி வருகிறார்கள். திரைப்படம் தொடர்பான விமர்சனங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருப்பதாக குறிப்பிட்ட அவர் படங்களை விமர்சனம் செய்வதில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், தற்போது அதிகரித்து வரும் சமூக வலைதள விமர்சனங்களில் படத்தை பார்க்காதீங்க என்ற விமர்சனம் கூறுவது சிறிது கடுமையாக இருப்பதாகவும் அவ்வாறு செய்யக்கூடிய விமர்சனங்களினால் படத்தின்  தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் திரையரங்குகள் திரைப்பட விநியோகஸ்தர்கள் படக்குழுவினர்கள் என அனைத்து விதமானவர்களின்  வாழ்வாதாரமும்  பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றார்.
செய்தி: பி.ரஹ்மான்

Kerala Lottery Result
Tops