தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கு, க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், குரல் கொடுத்து பாடிய ஒரு பாடல் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது பேசப்படும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தனது குருநாதர் சுப்பையா நாயுடு இறந்த பிறகு அவர் ஒப்புக்கொண்ட படங்களுக்கு தனது நண்பரான ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக இசைமைக்க தொடங்கினர்.
எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த எம்.எஸ்.விகவிஞர் வாலிக்கு பல படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரின் முன்னேற்றத்திற்கு உருதுணையாக இருந்துள்ளார். அதேபோல் கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் எம்.எஸ்.வியின் இசையில் உருவானது தான். சினிமாவை தாண்டி எம்.எஸ்.வி கண்ணதாசன் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது.
இவர்கள் கூட்டணியில் வந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வகையில் உள்ளதே அதன் தனி சிறப்பு தான். மேலும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் மெட்டுக்கு டம்மி வார்த்தைகள் போடும் வித்தைக்காரராகவும் இருந்த எம்.எஸ்.வி ரஜினிக்காக பாடல் பாடியுள்ளார். 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மூன்று முடிச்சு.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில், ”வசந்தகால நதிகளிலே” என்ற பாடல் இன்று பலரின் மனதை கவர்ந்த ஒரு பாடலாக இருக்கிறது. அதே சமயம் இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது. படம் தியேட்டரில் ஓடும்போது இந்த பாடலில் பலரும் எழுந்து வெளியில் வந்து பாடல் முடிந்தவுடன் மீண்டும் தியேட்டருக்கு உள்ளே சென்றுள்ளனர்.
இந்த பாடல் இப்போது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன் ரஜினிக்கு பாடியிருப்பார். இப்போது இருக்கும் குரல் இல்லாமல் வித்தியாசமான குரலில் பாட வேண்டும் என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறியதை தொடர்ந்து எம்.எஸ்.வி தனது குரலை மாற்றி பாடியதாக அவரது மகன் பிரகாஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
