தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பாவன் நடிகர் கவுண்டமணியை, “அவரு என்னய்யா நடிகரு” என்று தனது படத்தில் வேண்டாம் என்று பாரதிராஜாவுக்கே பிடிக்காத நிலையில், கவுண்டமணியை பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்தது எப்படி என்று நடிகர் பாக்யராஜ் பகிர்ந்துள்ளார்.
நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பாவன் நடிகர்கள் என்றால் அதில் நிச்சயமாக நடிகர் கவுண்டமணிக்கு ஒரு நிரந்தர இடம் இருக்கும். கவுண்டமணியின் நகைச்சுவைகளை ஒரு கோபக்கார மனிதரின் நகைச்சுவைகளாக எடுத்துக்கொள்ளலாம். சமூகம், அரசியல், அன்றாட மனிதர்களின் வாழ்க்கை என எல்லாவற்றையும் குறித்து நகைச்சுவையாக கவுண்ட்டர் கமெண்ட் அடித்து விமர்சித்தவர். இந்த விமர்சனம் என்பது கவுண்டமணியின் விமர்சனம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் விமர்சனமும் கூட. அதனால்தான், மக்களிடையே கவுண்டமணியின் நகைச்சுவை எடுபட்டது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் நடிகர் என்று போற்றப்படும் கவுண்டமணியை ஆரம்ப கால கட்டங்களில் நடிக்க வரும்போது, தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா ‘அவரு என்னய்யா நடிகரு…’ என்று சொல்லியுள்ளார். ஆனால், கவுண்டமணியை பாரதிராஜாவுக்கே பிடிக்காமல் அவரது படத்தில் நுழைந்ததை நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் இயக்குநர், நடிகர் பாக்யராஜ் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப கால கட்டங்களில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். உதவி இயக்குநராக இருந்தபோது பாக்யராஜ், நடிகர் கவுண்டமணியை பாரதிராஜா படத்தில் நுழைந்தது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
கிழக்கே போகும் ரயிலில் கவுண்டமணியை நடிக்க வைக்க நானும் பாலகுரு சாரும் படாத பாடுபட்டோம் என்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.
ஒரு நிகழ்ச்சியில் அந்த சம்பவம் குறித்து நினைவுகூர்ந்த நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பேசியதை அப்படியே இங்கே தருகிறோம். “எங்கள் டைரக்டர் (பாரதிராஜா) “யோவ், அந்த ஆள் நடிப்பு என்னய்யா… எனக்கு என்னவோ மாதிரி இருக்குயா… நாடக நடிகர் மாதிரி, என்னய்யா…” என்கிறார். “அவர் வேண்டவே வேண்டாம்” என்கிறார்.
“அவர் அந்த கேரக்டருக்கு டெல்லி கணேசை சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள், “இல்லை, இல்லை, அது சரியா வராது சார், அவர் கொஞ்சம் அவர் கொஞ்சம் மெஜஸ்டிக்கான லுக்ல இருக்காரு, அவர் கிராமத்து ஆளுக்கு எப்படி கரெக்டா இருக்கும், அதனால், கவுண்டமணியைப் போட்டுக்கலாம்னு” சொன்னோம்.
அதற்கு அவர் (பாரதிராஜா), கவுண்டமணி சொட்டத் தலையாக இருக்கிறார் என்று சொன்னார்.
நாங்கள் அதற்கு அப்புறம் அவருக்கு ஒரு விக் ரெடி பண்ணி, அவருக்கு ஒரு டெஸ்ட் எடுத்துட்டு வர்றோம்னு சொல்லிட்டு, அதற்கு அப்புறம் போய் கவுண்டமணிக்கு டயலாக் எல்லாம் கொடுத்து, டெஸ்ட் எல்லாம் எடுத்து அதைக்கொண்டுவந்து ஸ்கிரீனிங் பண்றோம், நைட் 10 மணிக்கு சாருக்கு வர்றதுக்கே இஷ்டம் இல்லை. சரினு வந்துட்டார். அவர் (பாரதிராஜா) வந்த உடனே, கவுண்டமணி டயலாக் பேசும்போதெல்லாம் நான், பாலகுரு எல்லாம் சிரிக்கிறோம். ராஜ் கண்ணன் எல்லாம் சிரிக்கிறோம்.
அப்போது, அவர் (பாரதிராஜா) எங்களப் பார்த்து நீங்கள் எல்லாரும் முடிவு பண்ணி, பண்ணிட்டிங்கியா” என்று பாரதிராஜா தனது படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டதை இயக்குநர், நடிகர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
‘அவரு என்னய்யா நடிகரு…’ என்று பாரதிராஜா கூறிய அந்த கவுண்டமணிதான் பின்னாளில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் நடிகராக உயர்ந்து கோலோச்சினார்.
