இன்றைய திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் பாரம்பரியமான இசை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அதேபோல் அவரது தாத்தா, இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் அவரது இசையில் எம்.எஸ்.வி ஒரு பாடலை பாடியுள்ளார்.
இன்றைய காலக்கட்ட சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும அனிருத், இளைஞர்கள் மத்தியில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரின் அம்மா வழி தாத்தா தான் எஸ்.வி.ரமணன். 1983-ம் ஆண்டு வெளியான உருவங்கள் மாறலாம் என்ற படத்தை இயக்கி, இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி, எஸ்.வி.சேகர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், ரகு என்பவர் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். விடுபட்ட ஒற்றை பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடலை பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
கதையின்படி, தனது பிள்ளையை இழந்த ஒய்.ஜி.மகேந்திரன், விரக்தியில் கடவுளை நினைத்து பாடுவது போன்ற ஒரு பாடல். ஆண்டவனே உன்னை இந்த பாடலை வைரமுத்து எழுத, எஸ்.வி.ரமணன் இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த பாடலை பாடியிருப்பார். பதிவு செய்யப்படடது இந்த பாடல் தான் என்றாலும், இந்த பாடல் முதலில் எழுதும்போது, ஆண்டவனே உன்னை என்று இல்லை. அதற்கு பதிலாக, தவறு செய்த ஆண்டவனை தண்டிக்க வேண்டும் என்று வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த பாடலை பாட வந்த எம்.எஸ்.வி, என்ன கவிஞரே தவறு செய்த அண்டவனை தண்டிக்க வேண்டும்னு எழுதி இருக்கீங்க. அவ்வளவு வேண்டாம் கவிஞரே நான் பாடுகிறேன். கொஞ்சம் மென்மையாக எழுதிக்கொடுங்களேன் என்று சொல்ல, அதன்பிறகு தான் வைரமுத்து, ஆண்டவனை உன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று எழுதி கொடுத்துள்ளார். அதன்பிறகு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு, படததில் சேர்க்கப்பட்டது.