தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன், ஆரம்பத்தில், தனது குரலில் பாடல் வெளியாக வேண்டும் என்று ஒரு உதவி இயக்குனரிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் மலேசியா வாசுதேவன். ரஜினிகாந், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து புகழ்பெற்ற இவர், சிறந்த பாடகர். பல ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், தற்போது இல்லை என்றாலும், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில், ஏ.ஐ,டெக்னாலஜி மூலம் அவரது குரலை கொண்டு வந்திருந்தனர்.
பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், ஹிட் பாடல்களை பாடியிருந்தாலும், தொடக்கத்தில் மலேசியா வாசுதேவனுக்கு, சரியாக அமையவில்லை என்று சொல்லலாம். பல இசையமைப்பாளர்கள், இவரை பாட வைத்தாலும், அந்த பாடல் படத்தில் இவரது குரலில் இடம்பெறாமல் போயுள்ளது. இந்த நேரத்தில் அன்னக்கிளி இயக்குனர்கள் தேவராஜ்- மோகன் இயக்கத்தில் வெளியான உறவாடும் நெஞ்சம் படத்தில் வரும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
1976-ம் ஆண்டு வெளியான உறவாடும் நெஞ்சம் படத்தில், சிவக்குமார், சந்திரலேகா, சுருளி ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்ற நிலையில், முதல் 2 பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஜானகி பாடியிருந்தனர். கடைசி பாடலான டியர் அங்கிள் என்ற பாடலை, மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை, பதிவு செய்யும்போது, மலேசியா வாசுதேவன் பாடல் பதிவுக்கு வந்துள்ளார்.
பாடல் பதிவு முடிந்தவுடன், இந்த அனைவரும் மலேசியா வாசுதேவனை பாராட்ட, அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த கவியரசர் கண்ணதாசனின் மகனும், நடிகருமான அண்ணாதுரையும், மலேசியா வாசுதேவனை பாராட்டியுள்ளார். அப்போது அவர். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அண்ணாதுரை கண்ணதாசனும், சொல்லுங்க என்று சொல்ல, இந்த பாடல் என் குரலில் வரணும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட அண்ணாதுரை கண்ணதாசன், நீங்கதான் பாடியிருக்கீங்க, உங்க குரலில் தானே வர போகுது என்று சொல்ல, இல்லை இதற்கு முன்பு, 10-க்கு மேற்பட்ட பாடல் பாடியிருக்கிறேன். எல்லாம் ட்ராக் மட்டும் வச்சிக்கிட்டு, டி.எம்.எஸ். போன்ற பாடகர்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். இந்த பாடல் மட்டுமாவது என் குரலில் வருமா என்று கேட்டுள்ளார். அதன்பிறகு, மலேசியா வாசுதேவன் குரலில், 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது என்று, அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
