நடிகர் அல்லு அர்ஜுன், தனது இத்தனை ஆண்டு கால உழைப்பு, நன்மதிப்பு அனைத்தும் ஒரே இரவில் உடைந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் திரையிடப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில், நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், அப்பெண்ணின் குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அக்பருதீன் ஒவைசி ஆகியோர் அல்லு அர்ஜுன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, போலீசார் அனுமதி மறுத்த பிறகும் படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் பங்கேற்றார் எனவும், கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்து விட்டார் எனக் கூறிய பின்னரும், படம் பார்த்த பிறகு தான் புறப்படுவேன் என அல்லு அர்ஜுன் போலீசாரிடம் கூறியதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஆணையர் வலுக்கட்டாயமாக அழைத்த போதே, அல்லு அர்ஜுன் புறப்பட்டார் எனக் கூறிய ரேவந்த் ரெட்டி, வெளியே செல்லும் போதும் காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்தினார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர் என கடுமையான விமர்சனங்களையும் ரேவந்த் ரெட்டி முன்வைத்துள்ளார்.
மேலும், அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? அல்லது கண்களை இழந்தாரா? அவரது இல்லத்திற்கு பிரபலங்கள் விரைந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் அக்கறை காண்பித்தார்களா? எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார். தான் முதலமைச்சராக இருக்கும் வரை திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் இல்லை எனவும் ரேவந்த் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார். தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட யாரையும் குற்றம்சாட்ட முடியாது எனக் கூறிய அல்லு அர்ஜுன், இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னைக் குறித்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன் நற்குணங்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக பல கருத்துகள் கூறப்பட்டு வருவதாகவும், தன் 20 ஆண்டு கால உழைப்பு உடைந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தான் திரையரங்கிற்கு சென்றது குறித்து ஏற்கனவே திரையரங்க நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் இருந்து பேசி முடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அல்லு அர்ஜுன், திரையரங்கில் இருந்து வெளியே வந்த போது ராட் ஷோ எதுவும் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
திரையரங்கை விட்டு வெளியேறுமாறு போலீசார் தன்னிடம் கூறவில்லை எனவும், கூட்டம் நெரிசல் அதிகமாக இருப்பதாக தனது மேலாளர்கள் கூறியதால் தான் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து குறித்து மறுநாள் தான் தனக்கு தெரியும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“திரையரங்கில் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் இருந்தேன். விபத்து குறித்து முன்னரே அறிந்திருந்தால், எனது குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்க மாட்டேனா? என் மனைவியை மட்டும் அழைத்துச் சென்றேன். எந்த குழந்தைக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடக்க நான் அனுமதித்திருக்க மாட்டேன்” என்று அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதால் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தன்னால் சென்று பார்க்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
