தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு, தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள, பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இளையராஜா இசையில் ஒரு பாடல் மட்டும் தான் பாடியிருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் வைத்து அதிக படங்கள் இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். ஏ.வி.எம். நிறுவனத்தின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான படம் கடவுள் அமைத்த மேடை. சிவக்குமார் சுமித்ரா இணைந்து நடித்த இந்த படததில், மேஜர் சுந்தர்ராஜன், சுருளி ராஜன், வடிவுக்கரசி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்திற்கு, கவிஞர் வாலி திரைக்கதை வசனம் எழுதியிருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பாடகி ஜென்சி முதல்முறையாக இணைந்து பாடிய இந்த பாடல், கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இந்த பாடல் வீடியோவில் பார்ப்பதற்கு அவ்வளவு சரியான பாடலாக இருக்காது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியிருந்தார்.
அதேபோல் இந்த படத்தில் வரும், தென்றலே நீ பேசு என்ற பாடலை, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தார். தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், கடந்த 1953-ம் ஆண்டு வெளியான ஜாதகம் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ள, இவர், முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் பாடியள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், 70-களின் தொடக்கத்தில் இசையமைப்பாரளாக அறிமுகமான இளையராஜா இசையில், ஒரு பாடல் மட்டுமே பாடியுள்ளார். அந்த பாடல் தான் கடவுள் அமைத்த மேடை படத்தில் வரும், தென்றலே நீ பேசு என்ற பாடல்.
70-களின் தொடக்கத்தில் மென்மையான குரலுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், யேசுதாஸ் ஆகியோர் பாடகர்களாக பிரபமாகிவிட்டதால், பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு போதுவமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியுள்ளார்.