தமிழ் சினிமாவில் தற்போது எம்.ஜி.ஆர் இல்லை என்றாலும் அவரை மனதில் வைத்து போற்றக்கூடிய பலர் இன்னும் இருக்கிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் மறைந்த நடிகர் மயில்சாமி. இவர் எம்.ஜி.ஆர் படம் பார்க்க போன தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்த ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் மெமிக்ரி ஆர்டிஸ்டாக கலக்கியவர் நடிகர் மயில்சாமி. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார். எம்.ஜி.ஆர் வழியை கடைபிடித்த நடிகர் மயில்சாமி தான் இறப்பதற்கு முன்புவரை, தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு தேடிச்சென்றும் உதவிகளை செய்துள்ளார்.
அதேபோல் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமாவில் சாதிக்க வந்த மயில்சாமி, தனது வாழ்நாளின் கடைசிவரை, எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே பார்த்துள்ளார். இதனிடையே ஒருமுறை நடிகர் மயில்சாமி, எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். இவருடன் இதயக்கனி விஜயன் என்பவரும் சென்றுள்ளார் சைதாப்பேட்டை நூர்ஷகான் என்ற தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது,
அப்போது மதியம் 1 மணிக்கு படம் திரையிடப்பட்டுள்ளது. மயில்சாமி அவரது நண்பர்கள் மற்றும் படம் பார்க்க வந்த பலரும் படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண், 2 மணிக்கு, திடீரென சாப்பாட்டு கேரியரை பிரித்து சாப்பாடு தட்டில் போட்டு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்துள்ளார். இதனை பார்த்த மயில்சாமி, படம் பார்க்க வந்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாரே என்று யோசித்துவிட்டு, அதன்பிறகு படத்தை பார்க்க தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து மறுநாள் மயில்சாமி படம் பார்க்க போகும்போது அதே பெண் மணி மீண்டும் 2 மணிக்கு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்துள்ளார். இதை பார்த்த மயில்சாமி, என்னம்மா, இங்க யாரும் சாப்பிட்டாங்களா இல்லையானு தெரியாது. ஆனா நீங்க தினமும் வந்து சாப்பிட்டுக்கொண்டே படம் பார்க்கிறீர்களே ஏன் என்று கேட்க, நான் எப்போதும் 2 மணிக்கு தான் சாப்பிடுவேன். ஆனால் இங்கு 1 மணிக்கு படம் போட்டுவிடுகிறார்கள்.
நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்தால், இங்கு படத்தை முழுதாக பார்க்க முடியாது. தலைவர் படத்தை எப்படி பாதியில் இருந்து பார்ப்பது அதனால் தான், நான் சாப்பாடு கட்டிக்கொண்டு தியேட்டருக்கு வந்து சாப்பிடுகிறேன் என்று மயில்சாமியிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதை கேட்ட மயில்சாமி, எம்.ஜி.ஆரை நினைத்து நெகிந்துபோனதாக கூறியுள்ளார்.
