தமிழ் சினிமாவில் இசையில் பல பரிணாமங்களை கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா ஒரே பாடலில் 2 புதுமைகளை செய்திருப்பார். முடிந்தால் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது.
அதேபோல் இசையில் பல புதுமைகளை செய்துள்ள, இளையராஜா, 1979-ம் ஆண்டு வெளியான பூந்தளிர் என்ற படத்தில், ஒரே பாடலில் 2 புதுமைகளை செய்திருப்பார். இரட்டை இயக்குனர்களான தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவக்குமார், சுஜாதா, சுருளி ராஜன், சிவச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். புதுமையான திரைக்கதையுடன் வெளியான இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
எம்.ஜி. வல்லபா, பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதிய இந்த படத்தில், வா பொன் மயிலே என்ற பாடல் இன்றும் காலம் கடந்து நிலைத்திருக்கிறது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய இந்த பாடலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார், பொதுவாக மயில் அகவுவது பலருக்கும் பிடித்தமாக ஒரு சத்தம். ஆனால் மயில், இரவில் அகவினால், அதன் சத்தம் நமக்கு, பயத்தை ஏற்படுத்தும் ஆனால், இந்த பாடலில், பயில் அகவும் சத்தத்தையே ராகமாக பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.
அதேபோல் சரணத்தின் இறுதியில் ஒரு கேப் விட்டு, அதன்பிறகு மீண்டும் பல்லவியை பாடுவது தான், பாடலின் வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை மாற்றியுள்ள இளையராஜா, உயிரிலே கலந்து மகிழ என்றவுடன் அடுத்து வா பொன் மயிலே என்று தொடர்ந்து பாட வைத்திருப்பார். இந்த பாடல், சிறப்பாக அமைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதனால் இந்த பாடல் காலம் கடந்து நிலைத்திருக்கிறது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“