தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல்கள் எழுத வந்த கவிஞர் வாலி, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அஸ்தான கவிஞராக மாறிய நிலையில், கண்ணதாசன் வாலியின் பாடல்களை கடுமையாக விமர்சித்த சம்பவமும் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட வாலி, திருச்சி வானொலியில், நாடகங்கள் எழுதி வந்த நிலையில், பாடல் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை வந்துள்ளார். தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களை வைத்து பல இசையமைப்பாளர்களிடம், வாய்ப்புக்காக அலைந்த வாலிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியான கவிஞர் வாலி. இனிமேல் வேண்டாம் என்று முடிவு எடுத்து சொந்த ஊருக்கு திரும்ப தயாராகியுள்ளார்.
அப்போது அவரை சந்தித்த பிரபல பாடகரும் அவரது நெருங்கிய நண்பருமான பி.பி.ஸ்ரீனிவாஸ், தான் இப்போது பாடிய ஒரு பாடலை பாடிக்காட்டியுள்ளார். இந்த பாடலை கேட்ட வாலி, இனிமேல், ஒரு சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிவிட்டு தான் சென்னையில் இருந்து புறப்பட வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் முயற்சி செய்துள்ளார். அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா என்ற பாடல். இந்த பாடலை கேட்டவுடன் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வாய்ப்பு தேடியுள்ளார்.
ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதிய நிலையிலும், பிரபலமாகாத நிலையில், எம்.எஸ்.வி இசையமைத்த, கற்பகம் படம் தான், வாலிக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து. வாலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார்.
அதே சமயம், அரசியலில் இருவரும் வெவ்வேறு கட்சியில் இருந்ததால், இருவரும் ஒருவருக்கு ஒருவரின் பாடல்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். வாலி எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நட்பு காரணமாக தி.மு.க ஆதரவாளராக இருந்துள்ளார். அதே சமயம், கண்ணதாசன், தி.மு.க. தவிர பல கட்சிகளில் இணைந்து பயணித்துள்ளார். இதனால் இருவரும் அரசியல் மேடைகளில், சினிமா பாடல்கள் குறித்து விமர்சனங்களை கூறி வருவது வழக்கம்.
வாலி எழுதிய காது கொடுத்து கேட்டேன் அந்த குவா குவா சத்தம் என்ற பாடலுக்கு, குழந்தை வயிற்றுக்குள் இருக்கும்போது காது கொடுத்து கேட்டால் சத்தம் வருமாயா என்று காலையில் அரசியல் மேடையில் கண்ணதாசன் கூறினால், மாலையில், காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்ல என்று எழுதியுள்ளார். காதலிக்கவே நேரமில்லை என்றால் யார் காதலிப்பார் என்று கண்ணதாசன் எழுதிய பாடலை விமர்சிப்பேன் என்று வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
