kerala-logo

கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் – நலமுடன் இருப்பதாக தகவல்


நடிகரும், ரேசருமான அஜித்குமார், போர்ச்சுகல் நாட்டில் நடைபெறவுள்ள கார் ரேஸ் பந்தயத்திற்கான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் ரேசிங் என்ற குழுவை உருவாக்கிய நடிகர் அஜித், பல்வேறு கார் ரேசிங் பந்தயங்களில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். அதன் முதல் கட்டமாக கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அவரது அணி மூன்றாமிடம் பிடித்தது.
இதனிடையே, அந்த போட்டிக்கான பயிற்சியின் போது அஜித்குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எனினும், இந்த விபத்தில் இருந்து அஜித்குமார் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து, போர்ச்சுகல்லில் நடைபெறவுள்ள கார் ரேசிலும் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
இதற்காக அந்நாட்டிற்கு சென்ற அஜித்குமார், தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பயிற்சியின் போது அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் கூறுகையில், “எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. இன்றைய பயிற்சியின் போது கூட எனது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சேதமடைந்த காரை மெக்கானிக் குழுவினர் சீரமைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kerala Lottery Result
Tops