ஒரு படத்திற்கான மொத்த பாடலையும் எழுதிய கண்ணதாசன், ஒரு பாடல் மட்டும் சரியாக வராதததால், பிறகு எழுதி தருகிறேன் என்று சொல்ல, அப்போது ஹோட்டலில் ஒரு பெண் குளித்துவிட்டு ஈர உடையுடன், வந்ததை பார்த்த கண்ணதாசன் அந்த பாடலை உடனடியாக எழுதி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால், அதிகமாக கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் வெளியான பாடல்களை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, இசையும் பாடலும் இணைந்த இந்த கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இருவரும் இணைந்து மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.
மேலும் தான் பாடல் எழுதும்போது தனது வாழ்க்கையில் சந்தித்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் கண்ணதாசன் பாடல் எழுதுவார். அந்த வகையில், 1963-ம் ஆண்டு வெளியான இது சத்தியம் என்ற படத்தில் நிகழ்ந்துள்ளது. கே.சங்கர் இயக்கத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்த படத்தில் அசோகன், நாயகனாக நடித்திருந்தார். 1963- ஆண்டு காலக்கட்டத்தில் பிஸியாக இருந்த கண்ணதாசன், ஒருமுறை கிடைத்தாலும் மொத்த பாடலையும் அவரை வைத்து எழுதிக்கொள்வார்கள்.
அந்த வகையில், இது சத்தியம் படத்திற்காக, அனைத்து பாடல்களையும் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயக்குனர் கே.சங்கர், தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆகியோருடன், கண்ணதாசன் பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு அனைத்து பாடல்களையும் பதிவு செய்த நிலையில், ஒரு பாடல் மட்டும் எழுத தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த பாடலை நான் சென்னை வந்ததும் எழுதி தருகிறேன் என்று கண்ணதாசன் சொல்ல, படக்குழுவினரும் ஒப்புக்கொண்டு ஊர் திரும்ப தயாராகியுள்ளனர்.
அந்த சமயத்தில், கண்ணதாசன் அந்த ஹோட்டல் ரிஷப்சனில் அமர்ந்திருக்கும்போது ஒரு பெண், குளித்துவிட்டு ஈர உடையுடன், வந்து தனது அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். குளித்துவிட்டு துவட்ட வேண்டியதானே என்று அந்த பெண்ணின் அம்மா சொல்ல, சரவண பொய்கையில் குளித்ததால், துவட்டுவதற்கு மனம் வரவில்லை என்று சொல்ல, அந்த வார்த்தை கண்ணதாசனுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதை வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘சரவண பொய்கையில் நீராடி’ என்ற பாடல். இந்த பாடல் முருகனின் பக்தி பாடல்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.