இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் நடைபெற்ற தனது சிம்பொனி வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பியபோது அவருக்கு பாராட்டு தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாவின், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான தேதியையும் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் செலுத்திய காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தேவராஜ் மோகன் இயக்கத்தில் கடந்த 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, தனது இசையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். திரையுலகில் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், இப்போதும் இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
இந்த நீண்ட இசை பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தனது முதல் படத்தில் இருந்தே கிராமிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனப்படும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பலரையும் ரசிக்கவும் வியக்கவும் வைத்தவர்.
அவரது பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) நிகழ்ச்சியில் தான் இயற்றிய சிம்பொனியை அரங்கேற்றம் செய்து மற்றொரு சாதனையை படைத்துள்ள இளையராஜாவுக்கும், தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகால திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் இளையராஜாவுக்கு எப்போது பாராட்டு விழா நடக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதில், ஜூன் 2-ந் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. ஜூன் 2 இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
