தமிழ் சினிமாவில் தனது காமெடியின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் சநதிரபாபு, எம்.ஜி.ஆர் சிவாஜி என இருவரிடமும் நெருக்கமாக இருந்த நிலையில், ஒரு படத்தில் நடிப்பதற்காக சிவாஜியை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்த சந்திரபாபு, பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டாவராக இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர், டி.ஆர்,மகாலிங்கம் 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். அதன்பிறகு 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திரபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.
பல திறமைகளை உள்ளடக்கிய ஒருவராக இருந்த சந்திரபாபு, 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு என்ற படத்தில் நடித்திருந்தார். சந்திரபாபு கதை எழுதிய இந்த படத்தை ஏ.பீம்சிங் இயக்கி அவரே தயாரித்திருந்தார், சந்திரபாபுவே நாயகனாக நடித்த இந்த படத்திற்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த நிலையில், பைனான்ஸ் கிடைக்காத காரணத்தால் படம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பீம்சிங் ஏ.வி.எம்.நிறுவனத்திடம் பைனான்ஸ் கேட்டுள்ளார்.
படத்தை எடுத்தவரை போட்டு பார்த்த ஏ.வி.எம்.செட்டியார் சந்திரபாபு நடித்தால் இந்த படம் சரியாக இருக்காது. உங்களுக்கு தான் சிவாஜியை நன்கு தெரியுமே அவர் நடித்தால் சரியாக இருக்கும் கேட்டு பாருங்கள் என்று சொல்ல, படத்தின் கதையை கேட்ட சிவாஜியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இந்த படத்தில் ஏற்கனவே நாயகனாக நடித்த சந்திரபாபுவிடம் படக்குழு சமாதானம் பேசியுள்ளனர். அப்போது சந்திரபாபு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளமோ அதைவிட ஒரு ரூபாய் அதிகம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதன்படி அவருக்கு சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி, ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, சாவித்ரி, தேவிகா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
