kerala-logo

சீரியல்களுக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!


தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தயில் சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதன் காரணமாக டிவி சேனல்களும் பெரும்பாலும் சீரியல்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதன் காரணமாக, முன்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் ஒரு சீரியல் முடிந்தால், அந்த நேரத்தில் உடனடியாக மற்றொரு புதிய சீரயில் தனது ஒளிபரப்பை தொடங்கி விடும். ஏறக்குறைய அனைத்து சீரியல்களும் ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும் கூட, தங்களுக்கு பிடித்த சீரியல் நட்சத்திரங்கள் நடிக்கும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சீரியல்களில், எதுவும் காட்சிப்படுத்தலாம் என்ற சுதந்திரமும் இயக்குனர்களுக்கு உண்டு.
ஒருசில முறை சீரியல்களில் ஒளிபரப்பாகும் சர்ச்சை காட்சிகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஒரு சில சீரியல்களுக்கு சர்ச்சை காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பியதற்காக கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில சீரியல்களில் எல்லை மீறிய காட்சிகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக திரைப்படங்கள் போல் சீரியல்களுக்கும் தணிக்கை சான்று அவசியம் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்; தற்போது ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில், வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும், சொத்துக்காக குடும்பத்தை சிதைப்பது, சதித்திட்டம் தீட்டுவது, திருணமான பெண்ணை காதலிப்பது போன்ற வக்கிரங்கள் அதிகம் உள்ளன. பொதுநலன் கருதி, தற்போது வெளிவரும் டிவி மெகா சீரியலை தணிக்கை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சின்னத்திரை தணிக்கை வாரியத்தின் சான்றிதழை பெறாமல் சீரியலை வெளியிடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Kerala Lottery Result
Tops