தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. குறிப்பாக, நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
சினிமா துறையில் நடிகை நயன்தாராவின் அர்ப்பணிப்பு மற்றும் அவர் ஈட்டிய வெற்றி அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமா மட்டுமின்றி தொழில்முனைவராகவும் அவர் வலம் வருகிறார். இந்த ஆளுமையின் காரணமாகவும் நயன்தாராவிற்கு கூடுதல் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனிடையே, தன்னை யாரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என்றும் நயன்தாரா அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், தனது குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்களில் நயன்தாரா பதிவிட்டு வருகிறார். இந்த சூழலில் நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கடந்த ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளன்று நயன்தாரா பதிவிட்டதாக கூறப்படுகிறது. இப்போதும் கூட அப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு தான் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது குறித்து நயன்தாரா தெரிவித்திருந்தார். அதில், “எனது தந்தை விமானப்படை அதிகாரியாக இருந்தார். அவர் 12 முதல் 13 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்ள வேண்டும். இதுவரை நான் அதைப் பற்றி பேசவில்லை, ஏனெனில் இது தனிப்பட்டது மற்றும் மிகவும் உணர்ச்சிவசமானது” என்று நயன்தாரா கூறியிருந்தார்.
மேலும், “என் தந்தையை ஒழுக்கமான மனிதராகவே நான் கண்டிருக்கிறேன். அவர் சீருடை அணிந்து சரியான நேரத்திற்கு பணிக்குச் செல்வார். அவர் குறித்து மற்றவர்கள் நல்ல விதமாக கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நபரின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. நான் படப்பிடிப்புக்குச் சென்ற பின்னர், என் தாயார் தான் அவரைக் கவனித்துக் கொள்கிறார். என தாயாரைப் போல், அவரை வேறு யாரும் பார்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் இருவருக்கும் ஏறத்தாழ ஒரே வயது தான் இருக்கும்” என்று அந்த நேர்காணலில் நயன்தாரா தெரிவித்தார்.