தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, பாரம்பரிய தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது போல் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1996-ம் ஆண்டு வெளியான லவ்பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை ஆகிய படங்களில், ஒரு காட்சியில் நடித்த விஜய் சேதுபதி, ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் படத்தில் பாக்ஸிங் மாணவராக நடித்திருந்தார். அதன்பிறகு, 2006-ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்தில் அடியாளராக நடித்திருந்த இவர், லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார்.
2010-ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி, அடுத்து சுந்தரபாண்டியன் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து பீட்சா என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு வரிசையாக தொடர் ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, வில்லன் கேரக்டரிலும் நடிக்க தொடங்கினார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கும் வில்லனாக நடித்து அசத்திய விஜய் சேதுபதிக்கு கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தியா மட்டுமல்லாமல், சீனாவிலும் வெளியான இந்த படம் வசூல் வேட்டை நடத்தியது. தற்போது ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன், பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என 3 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ஏஸ் மற்றும் ட்ரெய்ன் படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில்,தற்போது விஜய் சேதுபதி, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. புதுச்சேரி அடுத்த பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி செந்தில் கண்ணன்.. என்பவர் நடததி வரும், சிலம்ப குருகுலத்தில், பல்வேறு விதமான, சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளை நேசர்ந்தவர்களும், இவரிடம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, தற்காப்பு காலைகள் பயிற்சி பெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்து தான் நடிக்க உள்ள படத்திற்காக விஜய் சேதுபதி இந்த பயிற்சியை எடுத்து வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.