தோல்வியில் பொறுப்பேற்கும் எனக்கு படத்தின் வெற்றியிலும் பங்கு இருக்கிறது. என் படம் தோற்றால் அதற்கு என்னை மட்டுமே காரணம் காட்டுகிறார்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தள்ள சிவகார்த்திகேயன், சமீபத்தில், வெளியான அமரன் படத்தில் ராணுவ மேஜராக நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கததில் வெளியான இந்த படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. சாய் பல்லவி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக மாறிய நிலையில், ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஜெயம்ரவி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா முரளி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில், சினிமாதுறையில் சாதாரண ஆட்கள் வருவதை ஒரு சிலர் மட்டுமே விரும்புகிறார்கள். சிலர் அதை விரும்பவில்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று கேட்டார்கள். இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே, இந்த துறையில் நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கடந்து சென்றுவிடுவேன்.
அதே சமயம் எனது வெற்றியின் மூலம் நான் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்பில்லை. எனது வெற்றி அவர்களுக்கானது அல்ல. வெற்றியோ தோல்வியோ எல்லாமே என்னை கொண்டாடும் என் ரசிகர்களுக்கானது. சமூகவலைதளங்கில் ஒரு குருப் இருக்கிறது. என் படம் தோல்வியடைந்தால் அதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்லும். ஆனால் வெற்றி பெற்றால், என்னை தவிர மற்ற அனைவரும் காரணம் என்று சொல்லும். தோல்வியில் பொறுப்பேற்கும் எனக்கு வெற்றியில் பங்குபெற எல்லா உரிமையும் உண்டு என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
