kerala-logo

முதல் நாளில் அதிக வசூல்: சூர்யாவின் பெஸ்ட் மூவி பட்டியலில் கங்குவா; எத்தனை கோடி தெரியுமா?


சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் நேற்று (நவம்பர் 14) வெளியான நிலையில், இந்த படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல்நாளில் அதிக வசூல் செய்த படங்களில் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும், கடைசியாக அவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது கங்குவா படம் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானி ஜோடியாக நடித்துள்ளார்.
அதேபோல் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் நட்டி நடராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கோவைசரளா, ரெட்டின் கிங்ஸ்லீ, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் கங்குவா,
பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட கங்குவா திரைப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 14) வெளியானது. சூர்யா ரசிகர்கள் மத்தியில் கங்குவா பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் கங்குவா கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. முன்பதிவு செய்ததில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த படம், எதிர்பார்ப்புகளுக்கு குறைவாகவே இருந்தது.
சாக்னிஸ் (Sacnilk) இணையத்தில் வெளியான தகவலின்படி, கங்குவா படம், இந்தியாவில் அதன் முதல் நாளில் கங்குவா ரூ22 கோடியை வசூலித்துள்ளதாகவும், அனைத்து திரையரங்குகளிலும் படம் 30-40 சதவீதம் பார்வையாளர்கள் ஆக்கிரமிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமானதுதான் என்றாலும் கூட, சமீபத்தில் வெளியான பெரிய தமிழ் படங்களின் ஓப்பனிங்குகளுக்கு இணையாக இல்லை. ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்கள் பெரும்பாலான இடங்களில் 50-60 சதவீதம் தியேட்டர் ஆக்கிரமிப்பைப் பார்தர்தது.
அதே சமயம் கங்குவா முதல் நாளில் ரூ22 கோடி வசூலித்ததன் மூலம் சூர்யா தனது திரை வாழ்க்கையில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் வரிசையில், முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு சூர்யா நடித்த சிங்கம் 2 படம் முதல் நாளில் ரூ12 கோடி வசூலித்ததே அதிகபட்சமாக இருந்தது. கங்குவா திரைப்படம், ரூ. 350-கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.,
அதே சமயம் முதல்நாளில் ரூ 22 கோடி ஓப்பனிங் என்பது கணிசமாகக் குறைவு. விஜய்யின் கோட் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையான் ஆகிய படங்களைத் தொடர்ந்து, கங்குவா இந்த ஆண்டின் மூன்றாவது அதிக ஓபனிங் தமிழ்ப் படமாகும். அதிக ஓபனிங் இருந்தபோதிலும் படத்தின் பட்ஜெட்க்கு இது குறைவானதாக பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அமரன்  படம் கங்குவா வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம்.

Kerala Lottery Result
Tops