kerala-logo

ராம நாராயணன் கங்கை அமரன் ஆர்.சி. சக்தி… கவிஞர் வாலியின் புறக்கணிப்பால் வாழ்வில் உயர்ந்த இந்த 3 பேர்!


தமிழ் சினிமாவின் வரலாற்றை கூறினால் அதில் கவிஞர் வாலியின் பெயர் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்து இருக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, சிம்பு, சிவகார்த்திகேயன் காலம் வரை தனது எழுத்துகள் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களையும் வாலி சம்பாதித்து வைத்திருந்தார்.
இந்நிலையில், மூன்று பிரபல இயக்குநர்கள் தங்கள் கலைப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக கவிஞர் வாலியிடம் உதவியாளராக சேர விருப்பப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த சுவாரசிய தகவல்களை, கவிஞர் வாலியே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, “என்னிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று 1967, 1968 ஆகிய காலகட்டங்களில் சிலர் முயற்சி செய்தனர். அதில் ஒருவர் 1963-ஆம் ஆண்டில் நான் சினிமாவில் முன்னேறி வந்த காலத்தில் தொடர்ச்சியாக கிராமத்தில் இருந்து கடிதம் அனுப்புவார்.
என்னிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று விருப்பப்படுவதாக தொடர்ந்து எனக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே இருந்தார். மற்றொரு நபர் திருவல்லிக்கேணியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். அவர், தான் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் எனவும், என்னிடம் உதவியாளராக சேர வேண்டும் என்றும் என்னை தொடர்பு கொண்டார்.
மற்றொரு நபர் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக இருப்பதாக கூறினார். அவருக்கு எழுத்தில் ஆர்வம் எனக் கூறி என்னிடம் உதவியாளராக வர வேண்டும் எனக் கூறினார். இப்படி தொடர்ச்சியாக இவர்கள் மூவரும் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அவ்வாறு கிராமத்தில் இருந்து எனக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதியவர் தான் கங்கை அமரன். அவர், பின்னாளில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்து, இயக்குநராக தன்னை உயர்த்திக் கொண்டார். அதன்பின்னர், அவருடைய படங்களுக்கு நான் பாடல்கள் எழுதினேன்.
இதேபோல், மருந்து கடை நடத்தி வந்த மற்றொரு நபரும் பின்னாளில் பெரும் இயக்குநராக உயர்ந்து 100 திரைப்படங்களை இயக்கினார். அவர் தான் ராம நாராயணன். மேலும், தங்கப்பன் டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த நபரும் இயக்குநராக மாறினார்.
குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து திரைப்படம் இயக்கும் அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் உயர்ந்தார். அவர் தான் இயக்குநர் ஆர்.சி. சக்தி” என வாலி கூறியுள்ளார்.
நன்றி – P2TN Youtube Channel

Kerala Lottery Result
Tops