kerala-logo

ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்… குறைந்த வெளிச்சத்தில் ஷூட்டிங்: மர்மர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்


சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்ற ”பாராநார்மல் ஆக்டிவிட்டி” மற்றும் ”தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்” போன்ற திரைப்படங்களை உலக சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்தது உண்டு. ஆம், ”ஃபவுண்ட் ஃபுட்டேஜ்” ஜானரில் எடுக்கப்பட்ட இது போன்ற திரைப்படங்கள் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு சுவாரசியமான திரை அனுபவத்தை வழங்கி உள்ளன. இந்த வரிசையில் தற்போது தமிழ் திரையுலகின் முதல் ”ஃபவுண்ட் ஃபுட்டேஜ்” ஹாரர் திரைப்படமாக வெளியாகி உள்ளது ”மர்மர்”
ஃபவுண்ட் ஃபுட்டேஜ் என்றால் என்ன?
ஃபவுண்ட் ஃபுட்டேஜ் (Found Footage) என்பது, ஒரு விஷயத்தை ஆராயப்போன குழுவில் அனைவருமே இல்லாமல் போய்விட, அந்த வீடியோ ஃபுட்டேஜ் மட்டுமே கிடைக்கப் பெற, அதை பார்க்கும்போது நடந்த திகிலான விஷயம். அந்த வீடியோவில் படம்பிடிக்கப்பட்டிருப்பது என்பதாக இந்தக் கதைகள் அத்தனையும் அமையும். இப்படங்களில் முக்கியமாக நிஜத்தில் வீடியோ கேமராவில் வீடியோ எடுத்தபடி ஆட்கள் செல்வது போன்றதான காட்சிகள் இடம்பெறும். அதுவே அந்த திகிலான விஷயங்களை நேரே பார்வையாளர் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.

ஹாலிவுட், இந்தி சினிமால் இதே மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் தமிழில் இதுதான் முதல்முறை. திகிலூட்டவேண்டும் என்றே பெரும்பாலும் இரவு நேர காட்சிகளைதான் காண்பிப்பார்கள். பெரும்பாலும் பகல் நேர காட்சியை எடுத்து இரவு நேரம் மாதிரி செட்டிங் செய்து அதற்கென லைட்டிங் எப்பெக்ட்ஸ் சேர்த்து விடுவார்கள். ஆனால், இந்த ”மர்மர்” படத்தில் அப்படி இல்லாமல் உண்மையாகவே இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கி அசத்தி முயன்றிருக்கார்கள்.
மர்மர் -விமர்சனம்
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் யூடியூபர்கள் 4 பேர், முழுநிலா நாளில் குழுவாக மலைக்கிராமத்துப் பெண் உதவியுடன் ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா? என்பதுதான் கதை.
வனப்பகுதியை மையமாகக் கொள்ளும் பேய்ப் படங்கள் பொதுவாக ஹாரர் த்ரில்லர் சினிமாக்களாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டு, கிராம மக்களின் நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பதைத் தங்களுடைய பார்வையாளர்களுக்குக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட யூடியூபர்கள், தாங்கள் கொண்டுசெல்லும் 2 கேமராக்களில் பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பாகச் சித்தரிக்கும் வகையில் இப்படத்தின் கேமரா கோணங்களை அமைத்திருக்கிறார்கள். புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேமந்த் நாராயணன். படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை, இருள் சூழ்ந்த திரையில், ”எந்த பக்கத்தில் இருந்து என்ன வருமோ…” என்ற அச்சத்தோடு பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக கொடுத்திருக்கிறார். அதிலும் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தியிருக்கிறார். பின்னணி இசையமைப்பாளர் இல்லை என்ற உணர்வே ஏற்படாத வகையில் ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார்.
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ”மர்மர்”
“மர்மர்” திரைப்படம். முதல் நாளில் வெறும் 30 திரைகளில் மட்டுமே வெளியான இப்படம் தற்போது 300-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன்,  முதல் வாரத்திலேயே 2.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops