உடல் எடையை அதிகரித்துக்கொள்ளுமாறு தனக்கு அட்வைஸ் செய்த ரசிகருக்கு நடிகை சமந்தா கொடுத்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமாக யா மாயா சேசாவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த சமந்தா, விஜய், விக்ரம், சூர்யா, மகேஷ்பாபு உள்ளி்ட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடிதிருந்த சமந்தா, தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.
நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, ஒரு கட்டத்தில், நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், தொடர்ந்து நடிப்பில் மூழுமூச்சாக களமிறங்கி நடித்து வந்தார். இடையில், அரியவகை தோல் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் சமந்தா, ரசிகர்களுடனும் உரையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர், ப்ளீஸ் மேடம் உங்கள் உடல் எடையை கொஞ்சம் அதிகரித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ள சமந்தா, நான் என் உடல் எடைக்கு தேவையான டயட்டை பின்பற்றி வருகிறேன். மனிதர்களை எதாவது ஒன்றை வைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள்.
ஒவ்வொருவரும் அவர் அவராகவே இருக்கட்டும். 2024-க்கு வந்துவிட்டோம் நாம். வாழு வாழவிடு என்று இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
