kerala-logo

21 வருடங்கள் நிறைவு: என் வாழ்க்கை மாறியது இங்கு தான்; ஆன்மீக அனுபவம் பற்றி பேசிய ரஜினிகாந்த்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வரும் ரஜனிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒய்எஸ்எஸ் ஆசிரமத்துக்கு சென்றுள்ள நிலையில், கிரியா யோகா பயிற்சி மேற்கொண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள ஒரு வீடியோவில், ” நான் இந்த ஒய்எஸ்எஸ் ஆசிரமத்திற்கு மூன்றாவது முறையாக வருகிறேன். இரண்டு நாட்களாக இங்குத் தங்கியிருந்து ஆசிரமம் முழுவதும் பார்வையிட்டு நேரம் செலவிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய குருவோடு அமர்ந்து தியானம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் நீங்கள் ரொம்ப பாசிடிவாக இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதற்கான சீக்ரெட் கிரியாதான்.
நான் தியானம் பண்ண ஆரம்பித்ததிலிருந்து எனக்குள் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. இது ஒரு விதமான அமைதி. 2002-ல் நான் கிரியா செய்ய ஆரம்பித்தேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஆரம்பத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இவ்வளவு தூரம் செய்கிறோம். ஆனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே என்று நிறைய நாட்கள் நினைத்திருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை என்று திரும்பவும் செய்ய ஆரம்பித்தேன்.
செய்ய ஆரம்பித்து 10 வருடங்களுக்குப் பிறகுதான் அதனுடைய மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதனால் எப்போதும் ஒரு மன அமைதி, நிம்மதி கிடைக்கும். கஷ்டப்படாமலேயே எல்லாம் தானாக நடக்கும். இங்க இருக்கக்கூடிய குருக்கள் நம் கையை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நாம் இதனை விட்டால் கூட அவர்கள் நம்மை விட மாட்டார்கள். இது மிகவும் சீக்ரெட் டெக்னிக். இதனை யாரெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.
இந்த கிரியாவைச் செய்தால்தான் அதனுடைய பலன் தெரியும். இந்த ஒய்எஸ்எஸ் ராஞ்சி ஆசிரமத்திலிருந்து போகவே மனம் இல்லை. இனி வருடம்தோறும் இங்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தனது ஆன்மிக அனுபவத்தைப் பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரஜனிகாந்த் வாழ்க்கையை மாற்றியது இதுதானா என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Kerala Lottery Result
Tops