காப்பீடு என்பது அனைவருக்கும் இன்றி அமையாத பொருளாதார தேவையாகும். அவசர காலத்தில் ஏற்படும் செலவுகளை எதிர்கொள்வதற்கு காப்பீடு உதவுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தில் காப்பீடு தவிர்க்க முடியாததாக அமைகிறது. அந்த வகையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில காப்பீடுகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மருத்துவக் காப்பீடு
நம் குடும்பத்திற்கான மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு கட்டாயமாகும். விபத்து மூலமான சிகிச்சை, நோய் பாதிப்பு சிகிச்சை ஆகியவற்றுக்கான செலவுகளை பெறுவதற்கு மருத்துவ காப்பீடு உதவி செய்கிறது. இன்றைக்கு மருந்து மாத்திரை மற்றும் மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்டதால் இந்த காப்பீட்டை அதிக தொகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது. வசிக்கும் நகரம், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ தேவை மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் கவரேஜ் தொகையைத் தேர்வு செய்வது நல்லது.
ஆயுள் காப்பீடு
ஒருவரை நம்பியே அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்பட்சத்தில் அவர் கட்டாயம் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். இந்தக் காப்பீடை எடுத்த நபர், உலகில் இல்லை என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது. ஆண்டு வருமானத்தைப் போல் குறைந்தபட்சம் 15 மடங்கு தொகைக்கு இந்த பாலிசியை எடுக்க வேண்டும். அதன்படி, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.50,000 என்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம். இதன் 15 மடங்கு ரூ.90 லட்சம் ஆகும். அந்த வகையில் அவர் ரூ.90 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.
சொத்துக் காப்பீடு
நாம் வசிக்கும் வீட்டிற்கு மழை வெள்ளம், தீ விபத்து, திருட்டு போன்ற பாதிப்புகளில் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சொத்துக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். வீட்டின் உரிமையாளர் அதே வீட்டில் வசித்தால் இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வாடகைக்கு குடியிருக்கும் நபரும் இந்த காப்பீட்டை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தனிபர் விபத்துக் காப்பீடு
அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் உள்ளிட்ட பலர் கட்டாயம் தனிபர் விபத்துக் காப்பீடு எடுக்க வேண்டும். இந்த காப்பீட்டில் விபத்தால் நிகழும் மரணம், தற்காலிக ஊனம், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு இழப்பீடு அளிக்கப்படுகிறது. தனிநபர் விபத்துக் காப்பீட்டில் ஊனப் பாதிப்புக்கு இழப்பீடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வாகனக் காப்பீடு
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பு காப்பீடை எடுத்திருப்பது கட்டாயமாகும். இல்லையெனில் போலீஸார் நம் மீது வழக்கு பதிவு செய்வார்கள். எனவே, இந்த காப்பீடை ஒருவர் கட்டாயம் எடுக்க வேண்டும். ஒருவர் மீது வாகனம் மோதி அவர் உயிரிழந்தால், இந்த இழப்பீட்டை காப்பீடு நிறுவனம் வழங்கிவிடும். மேலும், வாகனத்திற்கு ஏற்படும் சேதத்தை ஈடுசெய்வதற்கு ஒன் டைம் டேமேஜ் காப்பீடு எடுப்பது நல்லது.
