kerala-logo

ரூ. 1792 கோடி முதலீடு – 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்


சென்னை அருகேயுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதால், அதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் மின்னணு சாதன பொருள்கள் உற்பத்தி செய்வதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆப்பிள் ஐஃபோன்களை அசெம்பிள் செய்யும் பணிகள் இந்த தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, ஃபாக்ஸ்கானின் முதலீடுகளை பெற பல மாநிலங்கள் போட்டிபோட்டு வந்தன. அதன்படி, தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தி வளாகத்தை விரிவாக்கம் செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 1,792 கோடியை ஃபாக்ஸ்கான் முதலீடு செய்யவுள்ளது.
இதற்காக அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஃபாக்ஸ்கான் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால், புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் 4.79 லட்ச சதுர அடி பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐஃபோன் அசெம்பிள் செய்வதையும் கடந்த. தனது உற்பத்தி திறனை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டங்களை மேற்கொள்வது தெரியவந்துள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் ஐபேட்கள் அசெம்பிள் செய்யவும் ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஐஃபோன்களின் விலை இந்திய சந்தையில் குறையும் எனவும், மற்ற ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விரிவாக்கம் மூலம் தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. முன்னதாக, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு பணிகளுக்கு, ஒப்பந்த நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இங்கு பணியாற்றுவதற்கு வயது, பாலினம், திருமண நிலை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என விளம்பரங்கள் செய்யப்பட்டது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து, பாலினம், வயது வரம்பு, திருமண நிலை போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என ஆள்சேர்ப்பு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஃபாக்ஸ்கான் அறிவுறுத்தியது. தற்போது, 1.24 லட்ச சதுர அடியில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டால், இங்கு சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kerala Lottery Result
Tops