இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் துணை நிறுவனமான BHIM (பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி), தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்வது மட்டுமின்றி செலவினங்களை பகிர்ந்து கொள்வது, நிர்வகிப்பது என பல வசதிகள் இதில் புகுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, BHIM 3.0 வரும் ஏப்ரல் மாதத்தில் முழுமையாக வெளியிடப்பரும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை கூடுதல் எளிதாக மாற்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புதுப்பிக்கப்பட்ட வசதிகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
இந்த BHIM செயலி, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது அதன் மூன்றாம் கட்ட புதுப்பிப்பை பெற்றுள்ளது. இது பயனர்களுக்கு எளிதான சேவையை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BHIM 3.0: புதிய வசதிகள் என்ன?
1. 15 இந்திய மொழிகள் உள்ளடக்கம்:
தற்போது BHIM 3.0-வில் 15 இந்திய மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்தவர்களும் இதனை எளிதாக பயன்படுத்தலாம்.
2. பலவீனமான இணைய இணைப்பில் கூட விரைவான பரிவர்த்தனைகள்:
BHIM 3.0, மெதுவான அல்லது நிலையற்ற இணைய இணைப்புகளில் கூட சீராக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. செலவுகளின் முழுமையான கண்காணிப்பு:
BHIM 3.0 மூலமாக உங்கள் மாதாந்திர செலவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும். இது, உங்களது அதிகப்படியான செலவினங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
செலவினங்களைப் பிரித்தல்: இப்போது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவுகளைப் பிரித்துக் கொள்ளலாம். வாடகை, உணவுக பில் அல்லது ஷாப்பிங் என எதுவாக இருந்தாலும் அதற்கான செலவை பிரித்துக் கொள்ளும் வசதி இடம்பெற்றுள்ளது.
செலவு பகுப்பாய்வு: BHIM 3.0-ன் டாஷ்போர்டு தானாகவே உங்கள் செலவுகளை வகைப்படுத்தும். இது பட்ஜெட்டை உருவாக்குவதற்கும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே கணக்கில் சேர்க்கலாம். இதன் மூலம் அவர்களின் செலவுகளைக் நீங்கள் கண்காணிக்கலாம். மேலும், குறிப்பிட்ட கட்டணங்களை ஒதுக்கலாம். இது வீட்டு பட்ஜெட் மற்றும் செலவு திட்டமிடலை முன்பை விட சிறப்பாக செய்ய உதவும்.
‘நடவடிக்கை தேவை’ எச்சரிக்கை:
BHIM 3.0, நிலுவையிலுள்ள கட்டணம், குறைவான நிதி போன்ற விஷயங்களை உங்களுக்கு நினைவூட்டும், இதனால் நீங்கள் எந்த முக்கியமான கட்டணத்தையும் தவற விட வேண்டியதில்லை.
