kerala-logo

[சிவாஜி படங்களில் நடிப்பதை தவிர்த்த பிரபலம்: காரணம் இந்த வீக்னஸ்!]


[தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்துடன் வலம் வரும் நடிகர் கார்த்திக், நடிகர் திகலம் சிவாஜியுடன் ஒரு படத்திற்கு மேல் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து பிரபல இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் புது வசந்தம் என்ற வித்தியாசமான படைப்புடன் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன். தொடர்ந்து விஜய்க்கு பூவே உனக்காக, சரத்குமாருக்கு சூரியவம்சம், விஜயகாந்துக்கு வானத்தைப்போல, சூர்யாவுக்கு உன்னை நினைத்து என பல வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரமன், கடைசியாக, 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இடையில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகிய விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹிட்லிஸ்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த இந்த படத்தை அவரது உதவியாளர்கள் இயக்கியிருந்தனர். சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக, பல யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்த விக்ரமன், நடிகர் கார்த்திக் குறித்து கூறியுள்ளார், விக்ரமன் இயக்கத்தில், 1998-ம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக கார்த்தியை கமிட் செய்ய போகும்போது, “சார் என்னால் காலை 7 மணிக்கு ஷூட்டிங் வர முடியாது. 11 மணிக்கு தான் என்னால் வர முடியும் சார். அதுக்கு சம்மதம் என்றால் இந்த படத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Join Get ₹99!

.

இதை கேட்ட விக்ரமன், “சென்னை மட்டுமல்ல, மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் வைத்தாலும் 11 மணிக்கு வந்துவிடுவீர்களா?” என்று கேட்க, அவ்வப்போது கார்த்திக் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல், “நீங்கள் 11 மணிக்கு வந்தாலும், மற்ற நடிகர்களுக்கு ஷாட் எடுத்துக்கொண்டு இருந்தால் நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கும் பரவாயில்லையா?” என்று விக்ரமன் கேட்க, அதற்கும் கார்த்தி ஓகே சொல்ல அதன்பிறகு தான் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நடக்கும்போது, “சார் காலை 7 மணிக்கு என்னால் வரவே முடியாது சார். இதற்காகத்தான் நான் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பையே விட்டுவிட்டேன். 3-4 படங்கள் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் 7 மணிக்கு வந்துவிடுவார். ஆனால் என்னால் வர முடியாது என்பதால் தான் அந்த படங்களை நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவருடன் ஒரு படம் மட்டுமே நடித்தேன்” என்று கார்த்திக் கூறியதாக விக்ரமன் தெரிவித்துள்ளார்.

1987-ம் ஆண்டு வெளியான ராஜமரியாதை என்ற படத்தில் மட்டும் கார்த்திக் சிவாஜி கணேசனுடன் இணைத்து நடித்திருந்தார். கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ஜீவிதா நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”]